Thursday, April 15, 2010

யூத குணம்

ஒரு காலத்தில் இயேசுவை கிறிஸ்து என்று கூறுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இயேசுவின் காலத்தில் வேதத்தை ஆராய்ந்து படித்திருந்த யூத மதத்தலைவர்களால் இச்சட்டம் யூத மக்களுக்குள் திணிக்கப்பட்டிருந்தது. மக்களில் பலர் இயேசுவை கிறிஸ்து என விசுவாசித்தனராயினும் ஆலயத்திற்கு புறம்பாக்கப்படுவோம் என கருதியதால் வெளிப்படையாக நடைமுறைப்படுத்தவில்லை.
வேதத்தை கற்றிருந்த யூத மத தலைவர்களுக்கு இயேசுவின் செயல்கள் எல்லாம் தவறானதாக தெரிந்தது. அவரது செயல்களை அவர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஓய்வு நாளில் தேவன் கொடுத்த கட்டளையை இயேசு மீறுகிறார் என்று பலமுறை அவரை குற்றஞ்சாட்டினார்கள். தேவனால் மட்டுமே பாவங்களை மன்னிக்கத் தக்கதாய் இருக்க இவரோ பாவிகளை மன்னிக்கிறவராகவும், சுகப்படுத்துகிறவராகவும் இருந்தது அந்த யூத தலைவர்கள் மத்தியில் பலவித பயங்களை தோற்றுவித்திருந்தது.
மேசியாவின் வருகையை எதிர்பார்த்த வண்ணம் யூத மக்கள் காத்துக்கிடக்கின்றனர். யூதர்கள் எப்போதுமே மேசியாவை எதிர்ப்பார்த்த வண்ணம் உள்ளனர். இது மோசேயின் காலத்திலிருந்தே நிச்சயமாய் நம்பப்பட்டது. ஏனெனில் மேசேயோ பின்வருமாறு அன்றைய இஸ்ராயேலருக்கு அறிவித்து விட்டதின் காரணமாகவே – “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார். அவருக்குச் செவிகொடுப்பீர்களாக” (உபா 15:18). ஆதலால் அன்றிலிருந்தே யூதர்கள் மத்தியில் மேசியாவின் வருகை குறித்த எதிர்பார்ப்பு ஆரம்பித்திருந்தது. இஸ்ராயேலரை கானான் தேசத்திற்கு அழைத்து வந்த மோசே இத்தீர்க்கதரிசனத்தை இயேசுவின் பிறப்புக்கு சிலபல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே அறிவித்து விட்டான்.
ஏன் இயேசு எனும் மேசியா அவர் உலகத்தின் இரட்சகர் என இயேசுவின் காலத்தில் அவரது வயதிற்கொத்த யோவான் ஸ்நானகன் கடைசியாக கூறும் வரை மேசியாவின் வருகை இஸ்ராயேலருக்கு தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டு வந்தது. ஆயினும் ஏற்றுக்கொள்ள மனதில்லாத யூத தலைவர்கள் எப்போதும் கல்லுகளை தூக்கிக்கொள்ளுவதை பழக்கமாக்கிக் கொண்டார்கள். இயேசுவின் வார்த்தைகள் கசப்பாக தோன்றின. இயேசுவை அவர்கள் எவ்வளவு எதிர்க்க துணிந்தார்களோ அதை அவர்கள் நம்புகின்ற தேவனுக்கு செய்யும் காரியம் என்பதை யூதர்களால் சிந்திக்க முடியவில்லை. ஏனெனில் தேவகுமாரனாய் வந்தவர் தேவனிடத்திலிருந்து வந்த தேவனாயிருக்கிறார்.
இயேசுவை எதிர்த்த யூதர்கள் கேள்விகளை கேட்பதிலும் கில்லாடிகளாய் விளங்கினார்கள். ஆயினும் இறுதியில் தங்கள் கேள்விகளே அவர்களுக்கு அவமானத்தை கொண்டுதந்தது. எவ்விதத்திலும் தேவனை பரீட்சை பாராதிருப்பாயாக என்பதை மறந்து விட்டனர் இந்த யூதர்கள். கடைசிவரை யூதர்கள் அவரை மேசியா என ஒத்துக்கொள்ள விரும்பவில்லை, காரணம் அவர்கள் தேவனிடத்திலிருந்து வரும் இயேசு கிறிஸ்து என தன்னை வீணாக எண்ணிக்கொள்கின்றான் என்றே கணக்கிட்டனர். “அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்.. அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.” அன்றைய யூத சமூகம் தனக்கு வேண்டியதை ஒருபோதும் அறிந்து கொள்ளவில்லை. ஆயினும் அதற்குமதிகமாக எதிர்பார்த்தது. ஆகையினால் எதிர்பார்ப்பு மிகுதியாயிருந்ததால் அனைத்தும் அறியாமையால் நிறைந்ததாயிருந்தது. இவ்வாறு தனது சொந்த ஜனங்களாலேயே அலைக்கழிக்கப்பட்ட வாழ்வை இயேசு முன்னரே அறிந்திருந்தார். இயேசு தேவனின் வலதுபாரிசத்தில் தேவனாய் அறிந்திருந்ததிலும் மானிட வாழ்வில் அவர் அனுபவிக்கும் போது உண்மையில் மானிட தன்மையின் தனிமை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் எனலாம். சொந்தமானவர்களே ஒதுக்கித்தள்ளுவதனை எந்தவிதத்தில் மனிதனால் ஏற்றுக்கொள்ள முடியும்.
தேவன் மனிதருக்குள் பிரபல்யமாகவேண்டும் என்பதை தேடி உலகிற்குள் வரவில்லை. அவர் தமக்கு சொந்தமானதிலேயே வந்தார். ஆனால் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. எத்தனை வேதனையான அனுபவம். துயர் துடைக்க வந்த தேவனை மக்கள் துயரப்படுத்திவிட்டனர். இது தேவனின் திட்டமல்ல. மனிதர்களின் அறியாமை அவர்களை அவ்வாறு செய்ய வைத்தது.
இயேசு யூத தலைவர்கள் தேவனால் உண்டாகவில்லை என்கின்றார். அவர்கள் தேவனால் உண்டாகியிருந்தால் இயேசுவை மேசியா என இலகுவில் அறிந்திருப்பர். அவர்கள் அதனை அறியாமல் போனதற்கு காரணம் தேவனை அவர்கள் முழுமையாக அறியவில்லை. தேவனை விட ஓய்வுநாள் சட்டம் அவர்களுக்கு பெரியதாய் அமைந்தது. தேவனுடைய கிரியைகளை விட அவர்களுடைய சிந்தனை அவர்களுக்கு மேன்மையானதாக மாறியது. எப்போதும் தேவனுக்கு பிரியமான கட்டளைகளுக்கு முதலிடத்தை வழங்கினாலும் உள்ளத்தின் வெளிப்பாடு அசமந்த போக்கை வெளிப்படுத்தியது. வழிகாட்டிகளான அவர்கள் குருடராயிருந்தார்கள்.
அதனாலே தான் தேவன் அவர்களை பலமுறை கடிந்து கொண்டார்.

1 comment:

Anonymous said...

இயேசுவானவர் தொழத்தக்க தெய்வம் தானா,என்று களம் அமைத்து போராடி வருகிறோம்;எமக்கு இந்த கட்டுரையானது ஊக்கமாக இருக்கிறது;எமது தளத்தினைப் பார்வையிட அன்போடு அழைக்கிறோம்.

http://chillsam.activeboard.com/